Karuvi -Jaffna

karuvi.org

கருவியின் தடங்கள் 2016 (01.01.2016-31.12.2016)

கருவியின் தடங்கள் 2016 (01.01.2016-31.12.2016)

அறிமுகம்:

கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூக வள நிலையம் வலுவிழப்புடன் கூடிய நபர்களின் சமூகப் பணி நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தில் பார்வை, கேட்டல், பேச்சு போன்ற புலன்சார் குறைபாடுடையவர்களும் கை, கால் பாதிப்புற்ற உடலங்க குறைபாடுடையவர்களும் மனநலிவு, தற்சிந்தனை போன்ற உளசார் குறைபாடுடையோரும் அங்கத்தவர்களாக உள்ளனர். இவர்களின் கல்வி, கலை, கலாசார, வாழ்வாதார, தொழில் மேம்பாட்டிற்கான முன்னெடுப்புக்களையும் இவர்களின் குடும்ப நலன் தொடர்பான விடயங்களையும் முன்னிலைப்படுத்தியதாய் எமது பணிகள் அமைகின்றன.

2013ஆம் ஆண்டு யூன் மாதம் 12ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட எமது நிறுவனம் மூன்று ஆண்டுகளைத் தாண்டிய பயணத்தில் வலுவிழப்புடன் கூடிய நபர்களின் பல்துறைசார் நலன்களை மேம்படுத்துவதில் அளப் பெரிய பணியாற்றி வருகின்றது. இந்த வகையில் 2016 ஆம் ஆண்டு அதாவது 01.01.2016-31.12.2016 வரையான காலப் பகுதியில் எமது நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட செயற்றிட்டங்கள் தொடர்பான விபரம்.

சுயதொழில் உதவிகள் வழங்கல்:

அங்கத்தவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் பொருட்டு எமது நிறுவனம் பொருத்தமான சுயதொழில் உதவிகளினை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த உதவி புரிகின்றது. அந்த வகையில் இவ்வாண்டு ஒரு பயனாளிக்கு கால் நடைகளும், மற்றுமொரு பயனாளிக்கு கடற்றொழில் உபகரணங்களும், மற்றுமொரு பயனாளிக்கு உணவுப் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வதற்கான பொருட்களும் வழங்கப்பட்டன.



அடிப்படை வசதிப்படுத்தல்கள்:

அங்கத்தவர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப எம்மிடம் உதவிகளினைக் கோரி கடிதங்களை அனுப்பி வருகின்றனர். இக்கடிதங்கள் பரிசீலிக்கப்பட்டு இவர்களுக்கான உதவிகளினை நாம் பெற்று வழங்கி வருகின்றோம். இந்த வகையில் இவ்வாண்டு ஒரு குடும்பத்தினரின் அடிப்படைத் தேவையினை இலகுபடுத்தும் பொருட்டு நீர் பம்பி மற்றும் அவற்றுடன் இணைந்த உபகரணங்கள் என்பன வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மற்றும் ஒரு அங்கத்தவருக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.

கல்வி உதவிகள் வழங்கல்:

அங்கத்தவர்களின் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியினை உயர்வடையச் செய்யும் பொருட்டு எமது நிறுவனம் மாணவர்களுக்கு பல்வேறுபட்ட உதவிகளினை வழங்கி வருகின்றது. அந்த வகையில் இவ்வாண்டு 12 பிள்ளைகளுக்கு மாதாந்த கல்வி நிதி வழங்கப்பட்டது. மேலும் 50 பிள்ளைகளுக்கு இவ்வாண்டு மார்கழி மாதம் ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. மேலும் ஒரு மாணவருக்கு துவிச்சக்கர வண்டி வழங்கப்பட்டது.


கடனுதவி வழங்கல்:

அங்கத்தவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் எமது நிறுவனம் கடனுதவிகளை வழங்கி வருகின்றது. அந்த வகையில் இவ்வாண்டு மூன்று அங்கத்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபா வீதம் 1லட்சத்து 50 ஆயிரம் ரூபா வட்டியின்றிய கடனுதவி வழங்கி வைக்கப்பட்டது.




விழாக்களும் நிகழ்வுகளும்:

இவ்வாண்டு எமது நிறுவனம் ஆண்டு விழாவினை யூன் 12 இல் குருநகர் கலாசார மண்டபத்திலும்
மாற்றுத்திறனாளிகள் தின விழாவினை டிசெம்பர் 03ஆம் திகதி இராமநாதன் வீதியிலுள்ள சரஸ்வதி மண்டபத்திலும் கொண்டாடியிருந்தது.


இவ்வாண்டு வெள்ளைப்பிரம்பு தின நிகழ்வு ஒக்டோபர் 15 இல் எமது நிறுவனத்தில் அனுட்டிக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது வெள்ளைப்பிரம்பு விழிப்புணர்வு ஊர்வலம் நல்லூர் ஆலயத்திலிருந்து எமது நிறுவனம் வரை இடம் பெற்றிருந்தது. இதில் பார்வையற்றோர், றோட்றிக் கழகத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து அங்கத்தவர்களுக்கும் உடைகள் மற்றும் அன்பளிப்புக்கள் என்பன வழங்கப்பட்டன.

மாதம் ஒரு பொதி :

எமது நிறுவனம் தொழில் புரிய முடியாத நிலையிலுள்ள வறுமைக் கோட்டின் கீழ் வாழும் அங்கத்தவர்களுக்கு மாதம் ஒரு பொதி என்னும் திட்டத்தின் கீழ் உலர் உணவுப் பொதிகளை வழங்கி வருகின்றது. இந்த வகையில் இவ்வாண்டு 200 உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.



‘வலு’ சஞ்சிகை:

மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விழிப்புணர்வை சமூகத்திற்கு ஏற்படுத்தும் நோக்குடன் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விடயங்களினையும் அவர்களது ஆக்கங்களினையும், பொது விடயங்களினையும் தாங்கி வலு என்னும் சஞ்சிகை எமது நிறுவனத்தால் வெளியிடப்படுகின்றது. 2014 ஆண்டு முதல் காலாண்டுக்கொரு முறை வெளிவரும் இச்சஞ்சிகையின் 9,10,11,12 ஆகிய இதழ்கள் இவ்வாண்டு வெளியிடப்பட்டன.


பட்டிமன்றக்குழு:

எமது நிறுவன அங்கத்தவர்களின் பங்களிப்புடன் பட்டிமன்றக்குழு ஒன்று ஆலய நிகழ்வுகள் பொது நிகழ்வுகள் என்பனவற்றில் சமூகத்திற்கு தேவையான தலைப்புக்களின் கீழ் ஆற்றுகைகளினை நிகழ்த்தி வருகின்றது. அந்த வகையில் இவ்வாண்டு நல்லூர் மகோற்சவ காலத்தில் ‘ஓம்’ தொலைக்காட்சியிலும் மற்றும் ‘டான்’ தொலைக்காட்சியிலும், கோப்பாய் பிரதேச சபை என்பனவற்றிலும் ஆற்றுகைகள் இடம் பெற்றன.


இராகஸ்ருதி இசைக்குழு:

எமது நிறுவன அங்கத்தவர்களின் பங்களிப்புடன் இராகஸ்ருதி என்னும் பெயரில் இசைக் குழு ஒன்று செயற்பட்டு வருகின்றது. ஆலயங்கள், பொது நிகழ்வுகள் என்பனவற்றில் இசையாற்றுகைகளினை இக்குழுவினர் நிகழ்த்தி வருகின்றனர். இவ்வாண்டு இவ் இசைக்குழுவினரின் மூன்று இசையாற்றுகைகள் இடம் பெற்றன.

உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் அலகு:

எமது நிறுவனம் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் அலகினூடாக Shine என்னும் பெயரில் திரவ சலவை சவர்க்காரம் ஒன்றினை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றது. இதனூடாக மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்புக்களினை வழங்கி வருகின்றது.

போட்டிகளும் கௌரவிப்புக்களும்:
எமது நிறுவனம் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வருடம் தோறும் பொது மக்கள் மற்றும் மாணவர்களிடையே கவிதை, கட்டுரை, சிறுகதை, சித்திர போட்டிகளை நடாத்தி வருகின்றது.

மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விழிப்புணர்வை சமூகத்திற்கு ஏற்படுத்தும் நோக்குடன் நடாத்தப்படுகின்ற இப் போட்டிகளில் பலர் பங்கு பற்றி வருகின்றனர். இப்போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் பரிசில்கள் என்பன எமது நிறுவனத்தினால் கொண்டாடப்பட்ட சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டன.

கலாசார அலுவல்கள் திணைக்களம் உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்து நடாத்திய விசேட தேவையுடையோர் தொடர்பான அரச கலை விழா 2016 இல் கருவி நிறுவனத்தின் மெல்லிசைப்பாடல் மற்றும் குறுநாடகம் என்பன மாவட்ட ரீதியில் முதலிடங்களினைப் பெற்றுக் கொண்டன. அத்துடன் மெல்லிசைப்பாடல் தேசிய மட்டத்திலும் முதலிடத்pனைப் பெற்றுள்ளது.

பயில் அமர்வுகள்:

எமது நிறுவன அங்கத்தவர்கள் மற்றும் நிர்வாக சபையினர் நிறுவனம்சார் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விடயங்களை மேலும் தெரிந்து கொள்ளும் நோக்குடனும் சமூகம் சார் புதிய நடைமுறைகளை அறிந்து கொள்ளும் பொருட்டும் பயில் அமர்வுகளில் பங்கு பற்றி வருகின்றனர். இந்த வகையில் இவ்வாண்டு பத்திற்கும் மேற்பட்ட பயில் அமர்வுகளில் எமது அங்கத்தவர்கள் பங்கு பற்றி பயன் பெற்றுள்ளனர்.

நிர்வாக சபைக்கூட்டம்:

எமது நிறுவன நிர்வாக சபையினரின் பத்துக் கூட்டங்கள் இவ்வாண்டு இடம் பெற்றன. இக்கூட்டங்களில் எமது நிறுவன வளர்ச்சி தொடர்பாகவும் அங்கத்தவர்களின் நலத்திட்டங்கள் தொடர்பாகவும் பல்வேறு விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

கருவியினை நிரந்தரமான இடத்தில் நிறுவுதல்:

எமது நிறுவனம் தற்போது இரண்டு வாடகை வீடுகளில் இயங்கி வருகின்றது. எனவே வலுவிழந்தவர்கள் வந்து செல்லக் கூடிய வசதியான இடம் ஒன்றில் விவசாயப் பண்ணை, தொழிற்பயிற்சிப் பகுதி, உற்பத்தி தொழிற்சாலைகள் என்பனவற்றை ஒரே இடத்தில் நிறுவி அதிக தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்குடன் காணியொன்றினைக் கொள்வனவு செய்ய எண்ணியுள்ளோம். இதற்கான பணிகள் எமது நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப்பணி வெற்றியளிக்கும் இடத்து வலுவிழந்தவர்களின் தொழில் மற்றும் வாழ்வாதார பிரச்சனைகள் பெருமளவில் குறைவடையும் என எதிர் பார்க்கின்றோம்.

கொடி வாரம்:

எமது நிறுவனம் 2016 ஐப்பசி மாதத்தினை மாற்றுவலுவுடையோர் விழிப்புணர்வு மாதமாக பிரகடனப்படுத்தி கொடி வார நிகழ்வு ஒன்றினை நடைமுறைப்படுத்தியிருந்தது. பாடசாலைகள், அரச அலுவலங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது மக்களிடையே நடைமுறைப்படுத்தப்பட்ட இவ் கொடிவார நிகழ்வினூடாக ஆறு லட்சம் ரூபா வரையிலான நிதியீட்டத்தினை பெற்றுக் கொள்ள முடிந்தது.

முடிவுரை:

எமது நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற பணிகளுக்கு நிதி, பொருள் மற்றும் ஆலோசனை வழிகாட்டல் உதவிகளினை வழங்கி வருகின்ற அன்பர்கள், சமூகசேவை ஆர்வலர்கள் நலன் விரும்பிகள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதோடு எமது சமூகப் பணிகளோடு இணைந்துள்ள அமைப்புக்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். கருவியின் சமூகப் பணிகளுகளுக்கு இறை கருணையும் சமூகப் பணியாளர்களின் பங்களிப்பும் தொடர்ந்தும் கிட்டும் என நாம் நம்புகின்றோம்.

யோகாப்பயிற்சி நெறி : Yoga Training Program
Previous Post யோகாப்பயிற்சி நெறி : Yoga Training Program
Next Post கருவியின் தடங்கள் (01.01.2017-31.08.2017)