Karuvi -Jaffna

karuvi.org

குழந்தைகளிடமிருந்து தொடங்கும் விழிப்புணர்வு

குழந்தைகளிடமிருந்து தொடங்கும் விழிப்புணர்வு

0 கணபதி சர்வானந்தா

கடந்த 13 வெள்ளிக் கிழமையன்று யாழ். புங்கங்குளம் கண்டிவீதி முன் புறூடிஸ் ஒழுங்கையில் அமைந்துள்ள “லிற்றில் சுட்டீஸ் மொன்ருசோரி“ (Little Chutties Montosorri) இல் இருந்து கருவி நிறுவனத்துக்கு ஒரு அழைப்பு வந்தது. இன்று “சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை எமது கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சகிதம் கொண்டாடுகிறோம். வாருங்கள் என” அந்த அழைப்பிலே குறிப்பிடப்பட்டிருந்தது.

அங்கு போகும்போது அக் கொண்டாட்டம் பற்றி எமக்குள்ளே பல கேள்விகள். சிறுவர்கள், வெள்ளைப் பிரம்பு இந்த இரண்டினையும் இணைத்தவாறே அந்தக் கேள்விகள் அமைந்திருந்தன. அந்தச் சிறுவர்களுக்கு வெள்ளைப் பிரம்பு பற்றிய விழிப்புணர்வை எவ்வாறு வடிவமைத்திருப்பார்கள்? என்ப தைக் காணும் ஆர்வத்தோடு அந் நிறுவனத்தைச் சென்றடைந்தோம்.

முறைப்படி வரவேற்கப்பட்டோம். ஏறத்தாழ 100 க்கு மேற்பட்ட சிட்டுகளுக்கு முன்பு நாம் அமர்ந்திருக்க நிகழ்வு தொடங்கியது. நிறுவன முதல்வர் திருமதி நீலகி அரவிந்தன் அவர்கள் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து அங்குள்ள ஆசிரியைகளில் ஒருவர் விழாவினை வழிநடத்திச் சென்றார். அந்த ஆசிரியை பிறருடன் அன்பாக இருப்பது பற்றி, பிறருக்கு உதவுவது பற்றி அந்தச் சிறுவர்கள் விளங்கிக் கொள்ளக் கூடிய மொழியில் அவர்களோடு உரையாடினார். அவர்கள் நடமாடும் சூழலில் ஒரு விழிப்புலனற்றவரைக் கண்டால் அவருக்கு எவ்வாறு உதவ வேண்டும் என்ற விபரங்களை எடுத்துச் சொன்னார். தொடர்ந்து வெள்ளைப் பிரம்பின் முக்கியத்துவத்தையும் அதனால் விழிப்புலனற்றவர்கள் பெறும் நன்மைகள் பற்றியும் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து கருவி நிறுவனத்தைச் சேர்ந்த து.யசிந்தன் திருக்குறள் வழியே திருவள்ளுவர் சொல்லிய “பிறருக்கு உதவுவது” என்ற விடயத்தினைச் சிறுவர் மொழியிலேயே எடுத்துரைத்து அவர்களோடு உரையாடினார்.

மேற்படி நிகழ்வில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் அச் சிறுவர்களின் எதிர் வினையாற்றல்களை அவதானித்தபோது ஒரு விடயத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அன்று மட்டுமல்ல தினமும் அவர்களுக்கு இவ்வாறான விடயங்கள் எடுத்துச் சொல்லப்படுவதோடு அவற்றை கதைகளாகவும், கலைகளாகவும், இலக்கியங்களுக்கூடாகவும், அரங்கத்துக்கூடாகவும் அவர்களுக்கு சொல்லப்படுகிறதென்ற உண்மையை என்னால் கிரகிக்க முடிந்தது.

அது மட்டுமல்லாது அந் நிறுவனம் அத் தின ஞாபகார்த்தமாக ஒரு நீர் சுத்தகிரிப்பு கருவியொன்றையும் கருவி நிறுவனத்துக்கு அன்பளிப்பாக வழங்கியது. அதனை அவர்கள் கருவி நிறுவனத்துக்குக் கொடுத்ததென்பது முக்கியமல்ல. அந்தப் பொருளை அவர்கள் வாங்குவதற்கு நிதியைச் சேகரித்த முறைமையைத்தான் பெரிதெனலாம். நிகழ்வுக்குப் பல நாட்களுக்கு முன்பு நிதி சேகரிப்புக்கென ஒரு பெட்டியைத் தயாரித்து அதனை அவர்கள் பார்வைக்கு வைத்திருந்தனர். பின்னர் அதன் முக்கியத்துவம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. கூடவே அது அவர்கள் பெற்றோர்களைச் சென்றடையவும் வழிவகுக்கப்பட்டது. சிறுவர்கள் சமூகத்தைப் பற்றிச் சிந்திக்க இது போன்ற நடவடிக்கைகளும் வழி வகுக்கும் என்ற விளக்கமும் பெற்றோர்களுக்கு சொல்லப்பட்டது.

அது மட்டுமல்லாது சிறுகச் சிறுகச் சேமிப்பது, சேமிப்பின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு உணர்த்துவது, அது கொண்டு சமூகத்துக்குரிய தேவையை அறிந்து அதனை நிவர்த்து செய்வது எனப் பலவற்றை இவ்வாறான செயற்பாடுகள் மூலம் சிறுவர்களுக்கு உணர்த்தலாம் என அக் கல்வி நிறுவனம் நம்புவது தெரிகிறது.

பொதுவாக ஒரு கல்வி நிறுவனம் தமது கல்விச் செயற்பாடுகளோடு தம்மை எல்லைப்படுத்திக் கொள்ளாது சமூகம் சார்ந்து ஒருவர் கொண்டிருக்க வேண்டிய பொறுப்பையும் உணர்த்தித் தமது மாணவர்களை வழி நடத்துவதென்பது போற்றத்தக்கது. அச் செயற்பாட்டினை முளையிலே ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லார் மத்தியிலும் ஏற்பட வேண்டும் என்பதற்கு மேற்படி கல்வி நிறுவனம் ஒரு சான்றாக அமையும் என்பது எனது கருத்து.

ஒருவர் விரும்புவதுதான் அவர் செயற்பாடாகப் பரிணமிக்கும் என்ற சொல்லுக்கு அமைய மேற்படி செயற்பாடும் அந் நிறுவனத்தின் விருப்பாகவும் இருந்திருக்கிறது.தம்முள்ளே உதித்ததை அவர்கள் நடவடிக்கையாக வெளிக் கொணர்ந்திருக்கிறார்கள். அதனையும் சிறுவர்களை வளப்படுத்துகின்ற ஒரு நடவடிக்கையாக மாற்றி அதற்கேற்ப நிகழ்வுகளை வடிவமைத்து, அது சார்ந்த நிறுவனங்களை ஒன்றிணைத்து அந் நிகழ்வை சமூகத்துக்கு ஒரு முன்னுதுாரணமாக்கியிருப்பது குறிப்பிடப்பட வேண்டிய விடயம்.

தற்போது எமது சமூகத்திலே நலிவடைந்து செல்கின்ற “பிறருக்கு உதவ வேண்டும்” என்ற சிந்தனையைப் பல வழிகளிலே புதுப்பித்து எமது சமூக ஆரோக்கியத்தை பலப்படுத்துவதென்பதைத் தலையாய கடமைகளில் ஒன்றெனப் பலர் கருகின்றனர்.

சிறுவர்களை வளப்படுத்துவதனூடாக, அவர்களை ஆரோக்கியமுள்ள மனிதர்களாக வளர்த்தெடுப்பதனூடாக, ஒரு தலைசிறந்த சமூகத்தைக் கட்டமைக்கலாம் என்ற உயரிய சிந்தனையின் அப்படையிலே பலர் சிந்திக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

யுத்தத்துக்குப் பின்னரான காலப்பொழுதில் எமது சமூகத்தில் நடைபெற்ற ஆரோக்கியமற்ற பல நடிவடிக்கைகளுக்கு நாம் தான் காரணம் என்பது பலரறிந்த விடயம். முதலில் பிறர் நலன் சார்ந்த சிந்தனைகளை வளர்த்தெடுக்கத் தவறியதை முக்கியமாகக் குறிப்பிடலாம். பிறர் நலன் சார்ந்து சிந்திக்காதவனும், அவர்களை வளப்படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணம் அற்றவனும் சமூகத்துக்குத் தேவையற்றவன் என்பதை நன்கறிந்த ஓளவையார், சிறுவர்களை வளப்படுத்தக் கூடிய சிந்தனைகளை ஆத்திசூடி, கொன்றை வேந்தன் முதலியவற்றினூடாகவும் திருவள்ளுவர் திருக்குறளினூடாகவும் விதைத்திருக்கிறார்கள். இவை இற்றைக்குப் பல ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை.

பொதுவான சமூக மாற்றத்துக்கான நற் சிந்தனைகளைக் கருத்தில் கொண்டு இது போன்ற காரியங்கள் அதிகம் நடைபெற வேண்டும். நடைபெறாதவிடத்து அவை நடைபெற நாம் அவற்றை ஊக்குவிக்க வேண்டும் என்பது காலத்தின் தேவை எனக் கொள்வோமாக.

சிறுவா்களுடன் வெள்ளைப் பிரம்பு தினம்
Previous Post சிறுவா்களுடன் வெள்ளைப் பிரம்பு தினம்
சிலைகள் செய்வதற்கான பயிற்சி
Next Post சிலைகள் செய்வதற்கான பயிற்சி